Thursday, December 9, 2010

வாருங்கள் என் அன்பு உறவுகளே! தங்கள் வரவு நல்வரவாகட்டும்! தாங்கள் என் சோலைக்குள் நுழைந்து கவி மலர்களை முகர்ந்தமைக்கான சான்றுகளை இங்கே பதிந்து விட்டுச் செல்லுங்கள்! அவை இச் சோலைக்குள் மேலும் பல வாச மலர்கள் மலர்வதற்கு உரமாக அமையும்!


தென்பொதிகைச் சாரலிலே பிறந்து வந்து
தென்பாண்டி மதுரையிலே சங்கம் கண்டு
மன்னவர்தம் மணிமுடியும் வணங்க வாழ்ந்து
வைகையிலே விளையாடும் தமிழே வாழ்க!


இரு கரங்கள் கூப்பி வந்தனங்கள் கூறி வாசமலர் தந்து வரவேற்கின்றேன் என் கவிச்சோலைக்குள்! விரும்பும் மலர் கிடைப்பின் விருப்புடன் முகருங்கள்!

மூத்த மொழி!
ஊமை உலகத்தின் உதடுகளில்
முதன் முதலாய் பூத்த மொழி
எங்கள் தமிழ் மொழி!

                                       தமிழ்த்தாய்!

அன்றந்தப் புலவோர்க் களித்த பாலை
இன்றெனக்கும் அமுதம் கலந்து ஈந்த தாயே!
பொன்மகளின் வணக்கத்தை ஏற்பாய் நீயே!
.......................

.....................................




நான்முகன் நாயகியே!

வந்தனங்கள் தந்து உன்னை
வாழ்த்துகின்றேன் நான் இங்கே!

பைந்தமிழில் சொல் எடுத்து
பாரெங்கும் புகழ் மணக்க!

பாமாலை பாடுகின்றேன்
பாத மலர் நான் தொழுதே!

வெண் தாமரையில் உறைபவளே
என் நாவினிலே உறைந்திடுவாய்!

நித்தம் உனை வேண்டி
முத்தமிழில் பாடுகின்றேன்!

நான்மறை போற்றுகின்ற
நான் முகனின் நாயகியே!

ஆய கலைகள் அத்தனையும்
நீ தருவாய் எந்தனுக்கு!
.................................




எழுதிய என் கவி!

என் எண்ணத்தில் தோன்றி எழும் 
எண்ணற்ற துன்பங்களை
எழுதி முடித்திடத்தான் எண்ணுகின்றேன்
என்னாலோ முடியவிலை!

கற்றது கைம் மண்ணளவு!
கல்லாதது உலகளவு!
கவிதை நூல்கள் பலவற்றில்
கருத்துக்களைத் தேடத் துடித்தேன்!

கடன் வாங்க எண்ணாதே என  என்
கல் நெஞ்சம் கூறிடவே
கணப் பொழுதில்  சம்மதித்து  
கை விட்டேன் எண்ணத்தை!

உன்னுக்குள் உறைந்துள்ள
உண்மையை நீ எழுதிவிடு
உருவாகும் கவி என்றே உள்ளம் கூறியதால்
உருவாக்கினேன்  கவிகள் பல !

எழுதி வைக்கத் தொடக்கி விட்டேன்.
நிறுத்தி விட முடியவில்லை!
ஊறி ஊறி வருகிறதே
உள்ளத்து வேதனைகள்!
.........................


வேதனைகள் கவிகளாகின!

உள்ளத்துள் உறைந்து கிடந்த
உள்ளத்து வேதனைகளை-மனம்
உருகி நெஞ்சம் நொந்து
உருவாக்கினேன் கவிகளாக!

உள்ளத்துள் அவை உறைந்தே கிடந்திருந்தால்
உயிர் வாழ்ந்தே இருக்கு மல்லோ?
இறக்கியே வைத்து விட்டேன்
இருப் பழிந்து போய் விடுமோ?

உண்மைகளைக் கடிந்து  
கவியாய் நான் வடித்ததனால்
தேடி வந்தார்கள் என்னைக்
கோடி எதிரிகள் இன்று!

எழுதிடாத கவிகளாக
என் கவிகள் இருந் திருந்தால்
எதிரி என்று எனக்கு யாரும்
இன்றைக்கும் இருந் திருக்கார்!

சுகமான சுமையுடன்
சுகமாய் நான் வாழ்ந் திருப்பேன்!
சுமையை நான் இறக்கி விட்டேன்
சூனியமாய்  போய் விடுமோ!
.............................



உண்மைக் கவிதை 

அமைதி நிலவும் பொழுதினிலே
ஓலமிட்டே ஓடிவரும்
ஒற்றை ஆற்றங் கரியினிலே
 ஓடியே வந்த மர்ந்தேன்!

ஓடும் வெண்முகிற் கூட்டங்களை 
பாடும் குயில்களது ஓசையினை 
ஆடும் மயில்களது பேரழகை 
அமர்ந் திருந்தே ரசித்தேன்!

கற்பனையை சற்று தள்ளி வைத்தே 
உண்மையை உற்று நோக்கையிலே 
துணிவு தூய்மை உண்மையுடன்
அழகாய் பொங்கியது கவியமுது!

வேண்டாத கற்பனை எதற்கிங்கு?
ஆண்டுகளாயினும் பலர் மனதை 
ஆண்டிடும் படைப் பொன்றை ஆக்கிவிடில்
ஆயிரம் மனதையும தாண்டிடுமே
என்றென துள்ளம் கூறியதே!

உண்மை உணர்ந்த அனுபவத்தை 
நெஞ்சை நிறைக்கும் உணர்வுகளை 
ஏற்றி வைக்கும் தனித்துவத்தில்
உண்மைக் கவிகள் ஆக்கி விட்டேன்!
ஆயிரம் மனதையும தாண்டிடுமே!
................................




தாகம்!

தரைக்குள் புதைந்த விதை
மரமாய் வெளி வந்து
                                                வை யகத்தை மகிழ் விக்கும்!
வா னகத்து மேகம் தரை யிறங்கி வந்து
மண் ணகத்தை வாழ வைக்கும்!
என் னகத்தே எழுந்த தாகம்
கவி மலர்கள் தூவி
என் தமிழை வாழ வைக்கும்!
....................................................


அடிமையின் கொடுமை!

அந்தி சாயும் நேரத்திலே
பொங்கி யெழும் கடல் அலைகளின் நடுவே
ஆதவனின் அழகை ரசிப்பதற்கு
ஆசை கொண்டேன் நான்
அன்றொரு நாள்!

மென்மையான தென்றல் காற்றுடன்
கடலலை ஓசையும் சேர்ந்து
செவிகளுள் புகும் போது
என் இதய அறைக் குள்ளே
ஒரு சுகமான உணர்வு!

ஆகாய மங்கை சூரிய அடுப்பை ஊதி அணைக்க
கோபங் கொண்ட ஆதவன் முகம் சிவக்க
வானம் செந்நிமாய் மாறும் காட்சி!
இந்த இனிய காட்சிகளின் நடுவே தான்
அந்த துன்பமான நிகழ்வும் என் கண் முன்னே!

அழகிய தோர் நாய்க் குட்டி
அதைச் சுற்றிப் பல ஆடவர்.
நாயின் கழுத்திலே கயிறு!
ஆடவர் கையிலோ கல்லு!
வாய் பேசாத அந்த ஜீவன் வதைக்கப் பட்டது!

வதைக் குள்ளான அந்த ஜீவனின்
அவலக் குரல்
எம் மக்களது வேதனையின்
வெளிப்பாட்டின் குரலாய்
என் செவிகளில் புகுவதைப் போல....

உயர்ந்த வர்க்கத்தார்
தாழ்ந்த வர்க்கத்தாரை வஞ்சிப்பதைப் போல...
மேதைகள் பேதைகளை
எள்ளி நகைப்பதைப் போல..
இப்படி எனக்குள்ளே பல உணர்வுகள்....!

சந்தியில் சிரித்து அந்தியில்  மடிந்து
அழிந்து போகும்
அழகிய மலர்களைப் போல்
நிலையற்ற வாழ்வை யுடைய மாந்தர்! 

மலருக்குப் பாதுகாப்புத் தரும்
பார்வைக்குக் கொடிய முட்களைப் போல
மனித மலருக்கு பாதுகாப்புத் தரும்
இந்த முள் வேலிக்கா இத்தனை கொடுமை?

இப்படி எனக்குள்ளே பல ஏக்கம்!
போராட்டம்! புலம்பல்! கலக்கம்!
வதைக் குள்ளான அந்த ஜீவன்
அடுத்த கணமே புதைக்கப் பட்டது
எம் மக்கள் புதைக்கப் பட்டதைப் போல...

அடிமையில் வாழும் ஓரினம்
வதைக்கப் படுவதும் புதைக்கப் படுவதும்
புதிதல்ல உலகத்தின் வரலாற்றில்!
இதைப் போல் எம்மினம்
புதை குழிகளில் புதைக்கப் பட்டவர் பல நூறு..

அந்த உண்மையை இந் நிகழ்வு உணர்த்த
துக்கம்  என் நெஞ்சை வதைக்க
நகர முடியாமல் கால்கள் தடம் புரள
கண்ணீர் கண் மணிகளை மறைக்க
 அகன்றேன் அங்கிருந்து மன வேதனையுடன்....
.............................................................................



அன்னைக்கு வணக்கம்!

நான் பிறந்த நாள், என் பிறந்த நாள்!
இல்லை.... இல்லை!
என்னைக் கருவில் தாங்கிய
கருணை உள்ளம் படைத்த
அன்னையைப் போற்றும்  நாள்!

சேயாகத் தவழ்ந்தேன் தாய் மடியில்-இன்று
சேய் ஒன்றைப் பெற்றெடுத்து தாயானேன்!
அது  என் மடியில் தவழும் வேளை
தாய் நான் சேயாகி என்
தாய் மடியில் தவழ ஆசை கொண்டேன்!

தாயான பின் தாய்ப் பாசம் கண்டேன்!
தெய்வமாய்  அன்னையை நான்  தொழுதேன்!
தன்னை உருக்கி ஒளி தரும்
மெழுகு வர்த்தியாய் தாயை கண்டேன்!
 தியாக தீபமாய் அவளைப் போற்றி நின்றேன்!

தாயான பின் தாயை நான் தொழுதேன்!
தாய்க்கு ஒரு  கவி வடிக்க நான்  துடித்தேன்!
தனிமையில் நான் தவிக்கும் வேளைகளில்
தாயின் அருமையையும் நன் குணர்ந்தேன்!
அந்நேரம் என்னருகில் அவளில்லை!

உதிரத்தைப் பாலாக்கி என்னை
முழுமையான சேயாக்கிய தெய்வத்திற்கு
என் கடன் செய்து முடிக்க
எனக்கு அவள் சேயாக வர வேணும்!
இறைவனைத் தொழு கின்றேன்
என் ஆசை நிறை வேறுவதற்காய்....!
........................................



தீபாவளி!

கிழக்கு வெளிக்க சேவல் கூவ
பட்சிகள் அமுத கானம் பாட
பள்ளியி லிருந்து துள்ளி எழுவோம்
மலரப் போகும் தீபாவளியை
மகிழ்ச்சியுடன் வரவேற்க!

ஆலய வழிபாடு செய்து
அன்னை ஆக்கிய பல காரத்தையும்
அமிர்தம் போன்ற உணவையும்
அயலவருடன் பகிர்ந் துண்டோம்
இத் திருநாளில் நாமன்று!

இன்றோ,
சொந்த மண்ணை விட்டு வந்து
அந்நிய மண்ணில் நாங்கள்
இயந்திரமாய் இயங்குகின்றோம்
இருப்பதற்கே நேர மின்றி!

நாளை தீபாவளி என நாட்காட்டி நினைவூட்ட
உறவுகளுடன் கூடி மகிழ்ந்து கூத்தாடும்
இன்ப தீபாவளி வந்திடுமா இனி நமக்கென்று
உள் நெஞ்சம் கலங்கி நிற்க
அமைதியாகச் சென்று விடும் ஆனந்த நாள் இதுவும்!
........................



எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்!

நிஜம் போலத் தோன்றிடும்
நிலை யில்லா உல கிதனை
நித்தமும் நானிங்கே
சித்தம் கலங்கி நின்றே
எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்!
எதுவுமே புரிய வில்லை!

திருவுற்று ஒரு திரு வுடையான்
திங்கள் போல் எழி லுடையான்
திரு வவதாரம் செய்தால்
திரு விழா எடுத்தலையும்
எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்!
எதுவுமே புரிய வில்லை!

கரு வுற்று ஒரு கனி யமுது
கயல் நாணும் கண் ணழகு
காரிகையாய் காட்சி தரின்
காந்தம் குன்றுதலை
எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்!
எதுவுமே புரிய வில்லை!

சீதனங்கள் சீர் வரிசை
ஆதனங்கள் ஆங்களித்து
சீ ரில்லா திருமணத்தில் இணையும்
 மாது நல்லாள் தனையும்
எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்!
எதுவுமே புரிய வில்லை!

சீ ரில்லா வாழ் வதனில் ஆங்கே
சேரிக் குடிசையிலே
சோரி சொரிகின்ற
சோகக் கன்னியரை
எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்!
எதுவுமே புரிய வில்லை!

ஏர் பிடித்த கை யுடனும்
ஏந் திணையாள் துணை யுடனும்
ஏறு நடை போடு மந்த
ஏழைத் தொழி லாளனையும்
எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்!
எதுவுமே புரிய வில்லை!

ஏழைக்கு உண வேது
ஏந்தல் எனக் கிணை யேது என்று
ஏகாந்தம் பேசுவதில்
ஏ கானந்தம் எய்துகின்ற போகியையும்
எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்!
எதுவுமே புரிய வில்லை!

பெற்றோரால் அமைந்த வாழ்வே
மேலான தென நம்பியோரும்
சில காலம் சென்ற பின்னே
சீரழிந்து போவதையும்
எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்!
எதுவுமே புரிய வில்லை!

பொம்ம லாட்ட வாழ்க்கை-அதில்
பொம்மை களாய் மா னிடரும்
புவி தனிலே போரிட்டு புரட்சிகள் புரிந் திடலும்
புள காங்கிதம் எய் திடலும் புழுவாய்த் துடித் திடலும்
எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்!
எதுவுமே புரிய வில்லை!
...................................

உறவுகளே உங்கள் வருகைக்கு நன்றி!
புதுப் புது மலர்களின் நறு மணத்தை  முகர  விரும்பின்
மீண்டும் மீண்டும் வாருங்கள் பொன்மகள் கவிச் சோலைக்குள்!