சமூகவியற் கவிதைகள்.

என் தமிழ்ச் சமூகத்தின் மீது
எனக்கும்  சிறிதளது அக்கறை இருப்பதை
இக் கவிதைகள் உங்களுக்கு
எடுத்துக் காட்டும் என நம்புகின்றேன்!
வாருங்கள் பார்க்கலாம்!
---------------------------




கவலைகள்!

கிளியைப் போல அழகில்லையே என 
அழகில்லாத சில பறவைகளுக்கு வருத்தம்!
அழகிருந்ததால்தானே அது கூண்டில்
அடைபட்டுக் கிடக்கின்றது என்பதை
ஏன் அந்தப் பறவைகள் எண்ணவில்லை?

காக்கையைப் போல
கூடு கட்டத் தெரியவில்லையே என்று
சில பரவைகளுக்கு வருத்தம்!
காக்கைகள் கூட்டிலேனும் 
நாம் வாழலாம் என
ஏன் அவை எண்ணவில்லை!

குயிலைப் போல இனிய குரல் வளம்  
இல்லையே என்று சில 
பறவைகளுக்கு மனதில் ஏக்கம்!
குரல் வளம் இருந்தென்ன 
கூடு கட்டத் தெரியாத குயில்தான் என்று 
ஏன் அவை சிந்திப்பதில்லை?

கொக்கைப் போலே 
உயரமாக இல்லையே என்று 
சில பறவைகளுக்கு கவலை!
உயரமாய் இருந்தென்ன 
சந்தர்ப்பம் பார்த்து உயிர் கொல்லும் 
சிறிய மனமுள்ள பறவைதானே அது என்பதை
ஏன் அவை என்ன மறந்தன?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை!
இல்லாத ஒன்றிற்காய் 
ஏங்குவதை விட
இருபாதை எண்ணி 
மகிழ்ச்சிப் படின்
என்றும் எவர்க்கும் நின்மதியே!
......................





விதியெனும் விலங்கு! 

இதய மிரண்டு காதலிலே வீழ்ந்ததனாலே
திருமணத்தில் இணைந்திடவே ஏங்கி நின்றதே!
உறவுகளின் ஒப்புதலைப் பெற்றுக் கொள்ளவே
தணலின்  மீது அனுதினமும் தவ மிருந்ததே!

காத்திருந்து காத்திருந்து காலம் கடந்ததே!
காதலுக்கு ஒப்புதலோ  கிடைக்கவில்லையே!
பூக்களது கலப்பு மணத்தை மாலை என்போரே
இவர்களது கலப்பு மணத்தை சாதி என்றாரே!

பாதகமே புரிந்ததுபோல் தண்டனை கொடுத்தார்!
விதியென்று  பெயரிட்டே  விலங்கை யிட்டார்!
திருமணச் சந்தையிலே அவனும்  விற்பனையானான்!
உள்ளம் நொந்ததாலே அவளோ முதிர் கன்னியுமானாள்!
.......................................................



விதவை!

தீயை வலம் வந்து
திருமணம் முடித்து
தீபமேற்ற வந்த தீபம் தீயில் எரிந்தது
கொண்டவனைப் பறி கொடுத்து!

தாலிக்கயிறு மயானத்தில் உறங்க- இவள்
விருப்பங்கள் விலங்குகளாக வீடே இவள் சிறையாக
கொட்டும் மழையில் நனையும்
கூரையில்லா மண் சுவரானாள்!

மனச் சாட்சிக்கு
விவாகரத்துக் கொடுத்து விட்ட சமூகமும்
வெள்ளையுள்ளம் கொண்டவளை
வெண் சேலைக்குள் தள்ளியது!

பூவையும் பொட்டையும் இழந்தவளுக்கு
பொய்ப் பூச்சூடி பொட்டு வைத்தது பொய்யுலகம்!
.........................................................



ஜாதிகள் வேண்டாம்!

மண்ணிற் பிறக்கையிலே யாவரும் மனித குலமே!
தொழிலின் துணையாலே வகுத்தார்கள் மனிதரையே!
ஆண்ஜாதி பெண்ஜாதி  என மனித ஜாதிகள் இரண்டே!
மற்றவை எல்லாம் மனிதன் உருவாக்கியதே!

ஓடும் உதிரத்திலும் வழிந் தோடும் கண்ணீரிலும்
தேடிப் பார்த்தாலும் ஜாதிகள் தெரிவதுண்டா!
அனைவர் இரத்தமும் செந்நிறம் தானே!
கண்ணீரின் சுவை உவர்ப்புத் தானே!

செய்கையில் மட்டுந்தான் ஒருவன் உயர்வதும் தாழ்வதும்
ஜாதியில் அல்ல! இன்று நாம் இவ் வுலகில்!
நாளை நாம் எப்படியோ?
இதற் கிடையிலே ஏனிந்தப் போராட்டம்?

காக்கைகளைப் போல் நாங்கள்
ஒற்றுமையாய் வாழ்ந்து விட்டால்
வாழ்க்கையின் உயர் நிலைக்கே சென்று விடலாம்!- மனிதா!
ஜாதிகளை தேடாது  மனித நேயத்தை தேடிவிடு!
...................................................



பணம் செய்யும் நாசம்!

வெளிநாட்டில் சாப்பாட்டுக் கடையில்
சட்டி பானைகளுடன் நித்தம்
சண்டைகள் செய்து
மின்னடுப்பில் முகம் வெந்து
நித்திரையின்றிக் கண் சிவந்து
உறவுகளை எண்ணி மனம் நொந்து
உழைத்த பணத்தைச் செலவின்றி
அனுப்பி விடுவான் அண்ணா ஊருக்கு!

அக்காவும் தங்கையும்
அடுத் தடுத்துத் திட்டம்
அடுத்து எதை வாங்குவதென.....
தம்பியோ கைப்போன் கணணி என
விஞ்ஞானத்தின் விந்தைகளுடன் விளையாட்டு!
பணம் செய்யும் நாசத்தால்
சந்ததி கெட்ட செய்தி
சந்தி எல்லாம் பேச்சு!
.......................


வெள்ளை நிறம்!

வெள்ளைப் புடவை அணிந்தவளை
அமங்கலி என்று ஒதுக்குமிவ்வுலகம்
வெள்ளைப் புறாவைச்
சமாதானத்தோடு சம்பந்தப் படுத்துவது ஏனோ?
...................................................



நற்செயல் நன்மை தரும்!

தூயமனம் அன்பை நேசிக்கும்!
அன்பை நேசித்தால் உறவுகள் பெருகிடும்!
பெருகிடும் உறவுகள் உயர்விற்கு உதவிடும்!
உயர்வு உன்னத வாழ்வைத் தந்திடும்!
வாழ்வில் உயர்ந்த அறத்தைச் செய்திடின்
உயிர்கள் உயர்வு பெற்றிடுமே!
உயிர்கள் மண்ணுக்கே! மறுப்பதற் கில்லை.
அந்த மண்ணும் மரத்திற்கு உயிர் தருமே!
                                                   ...............................................



தீய நட்பு!

தீய மலர் ஒன்றிலிருந்து  வீசும் துர்நாற்றம்
நல்ல மலர்களின் நறுமணத்தையே
நாசம் செய்து விடுவது போல்
தீயவர் உறவும் தூயவர் உள்ளத்தைத்
துருப் பிடிக்க வைத்து விடும்!
கீழ்ப் படித்தல் எனும் உயர் பண்பையும்
கீழ்த் தரமாய் ஆக்கி விடும்!
நெஞ்சினில் தூய்மை நிலைத்திட மறுத்தால்
வஞ்சகம் நெஞ்சினில் வந்து குந்தி விடும்!
..............................................



இளமைக் கோலங்கள்!

உலகமென்னும் அரங்கினிலே
கலாச்சாரக் காட்சியிலே
ஆடுகின்றார் சிலரிங்கே
அத்தனையும் வேடமன்றோ!

ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற
உன்னதத்தைத் தொலைத்து விட்டு
நெறி கெட்ட வாழ்வு வாழும்
முறை கெட்ட மாந்தரிவர்!

அங்கே ஊரெல்லாம் அழுகுரல்!
இங்கே இவர் தேடுவதோ இன்பத்தை!
வாலிபத்தின் பசிக்கு
தற்காலிக புசிப்பு!

கரையற்ற இன்பம் வேண்டி
சிறைபட்ட பூமியிலே
முறைகெட்ட செயல்களிங்கே!
உண்மை உலகம் ஒளிந்ததேனோ?
மனச்சாட்சி கூட மரணித்ததாலோ?

பூஜைக்காக புது மலர்கள் கூட
நறுமணம் வீசுதிங்கே!
வெள்ளாடுகளும் வேங்கைகள் ஆனதன்றோ!
இளமைக் காலங்கள்
ஏனோ அலங்கோலமானதிங்கே.
.......................

வாழ்க்கையின் நியதி!

காதலை உணர்கையில்
காதல் ஏன் அழிகிறது?
அன்பை அறிகையில்
அன்பு நெஞ்சம் ஏன் அகல்கிறது?
உண்மையை உணர்கையில்
உண்மை உலகம் ஏன் ஒழிகிறது?
செல்வத்தைச் சேகரிக்கையில்
சேர்ந்த செல்வங்கள் ஏன் தொலைகிறது?
தனிமையில் தவிக்கையில்
உறவுகளும் ஏன் விலகுவது?
இதுதான் வாழ்க்கையின் நியதியா?
..................................



தேடல்!

பொன்னைத் தேடுகிறாய்!
புகழைத் தேடுகிறாய்!
பெண்ணைத் தேடுகிறாய்!
மனிதா!
ஒருகணமேனும் உன்னைத் தேடினாயா?
உன்னைத் தொலைத்த பின்னே
பொன் எதற்கு? பெண் எதற்கு?
உன்னைத் தின்னும்
மண்ணுந்தான் உனக்கெதற்கு?
.....................................




எறும்பு தொடாக் கரும்பு!

வறுமை என்னை
வெறுமை ஆக்கியதால்
இனிப்பிருந்தும்
எறும்பு தொடாக் கரும்பானேன்!
.........




 திருமண நல் வாழ்த்துக்கள்!

இல்லற வானில் இனிய சிறகை விரித்து
வசந்தம் பாடி வரும் வானம்பாடிகளே!

அன்றில் பறவையாய் ஒன்று சேருங்கள்!
கவரி மான்களாய் வாழ்ந்து காட்டுங்கள்!

உயிர்கள் இரண்டாயினும் பார்வைகள் ஒன்றாகட்டும்!
பிறவிகள் பலவாயினும் உறவுகள் நிலைத்திருக்கட்டும்!

உங்கள் வாழ்க்கை ஒரு நந்தவனம்!
ரோஜாத் தோட்டமாக நறுமணம் வீசட்டும்!

வாழ்க்கை என்ற ஜீவாநதியில்
குடும்பம் என்ற தோனியின் இரு துடுப்பாகுங்கள்!

வர்ணப் பொன் மீன்களாய்
வாழ்வில் என்றும் உயர்ந்து நில்லுங்கள்!
................................



கொடியவர்!

ஐயிரண்டு திங்கள்
அடி வயிற்றில் தாங்கி
மரண வேதனையை ஏற்று
என்னை இப் பூவுலகில் பிரசவித்த
என் தாயவள் கொடியவளே!

கொடிய நோய் வாட்டு தவளை
இளமையில் கொடுமையாம்
வறுமை வாட்டு தென்னை!
ஏழையாக இவ்வுலகில் அவதரித்த
நானும் ஒரு கொடியவனே!

அன்னைக்கு மாறா நோய்
அணு வணுவாய் அழிகின்றாள்!
இறைவா எனை ஏன் படைத்தாய்?
 அவளை பார்த்துப் பார்த்தே சாவதற்கா?
இறைவா நீயும் கூடக் கொடியவனே!

அன்னை நோயைக் குணமாக்க
ஆலோசனைகள் கூறி விட்டு
இலட்சம் காசு கேட்டு என்னை
பைத்தியனாய் ஆக்கி விட்ட
வைத்தியனும் கொடியவனே!

உறவுகள் நட்புகள் என பலரை நான்
உதவி கேட்டு நின்ற வேளை
உதவுவதற்கு மறுத்து விட்டு என்னை
உதாசீனம் செய்து விட்ட
உறவினரும் கொடியவரே!

மானிடப் பிறவி தந்து எம்மை
பாரினிலே பாவியராய் அலைய விட்டு
பார்த்துச் சிரிக்கும் படைத்த
இறைவ னவனும் கொடியவனே!
.............................



சாதித் தேள்!

ஒரு தாய் பிள்ளைகள் நாமென்பார்-அவரே
செய்யும் தொழிலில் சாதிகள் உண்டென்பார்!

சாதி எனும் தேள் கடித்து தீயினிலே வெந்தவரை
தீண்டப் படாத தொளு நோயராய்க் கண்டார்!

முல்லைக்கு தேர் கொடுத்தோன் வழி வந்தோர்
சமூகத் தேரின் கொடி மரம் சாய்த்தார்!

ஒரு தாய் பிள்ளைகள் நாம் என்றோர்
மாற்றான் தாய் பிள்ளைகளாய் மோதுகின்றார்!

வருண நூலை எடுத்து தீயினிலே போடு!
சாதிச் சாக்கடையை எழுத்து நீயும் மூடு!
................................................



என் கணவா எங்குற்றாய்!

மகவொன்று பிறந்து விட்ட
மகிழ்ச்சி பொங்கும் செய்தி கொண்டு
மாமியார் இல்லம் நோக்கிச் சென்ற
என் கவணா  எங்குற்றாய்? ஏன் திரும்பி வரவில்லை?

இதயத்தில் உயிர் வற்ற வெப்பத்தில் தலை சுற்ற
யன்னல் திரை நீக்கிப் பார்த் துள்ளேன்!
 விரைந்து   என்னிடம் நீ வருவாயோ!
பூப் போன்ற என் மனமும் புழுவாய்த் துடிக்குதையோ!

திக்குத் தெரியாது விக்கித்து நான் நிற்க
சிக்கித் தவிக்கிறது எந்தன் உயிர் மூச்சும்
நுரை ஈரலிற்குள் நுழைய முடியாமல்!
எனை ஓடி வந்து காப்பாயோ!

பதினைந்து ஆண்டுகள் தவம் செய்தேன்
பக்கத்தில் நீ யின்றி!
ஆசைகளுக்கும் கல்லறை கட்டி விட்டேன்-என்
ஆசை நாயகனே எங்குற்றாய் !

பூவினின்று வெளி வந்த பிஞ்சொன்று
வெதும்பி பழுத்து வீழ்ந்தது போல்
போய் விட்டான் என் மகனும்!
கொடிய நோயின் வாய்ப் பட்டு!

வெறுமை எனும் பள்ளத் தாக்கில்
வீழ்ந்து விட்டேன் நானும் இன்று!
வானைக் கிழிக்கிறதென்  அவல ஒலி!
என் கணவா எங்குற்றாய்? ஏன் இன்னும் வரவில்லை?
................................................



தங்கள் வருகைக்கு நன்றி! மீண்டும் மீண்டும் வாருங்கள்!


எழுத்துலகில் எனது பெயர் பொறிக்கப்பட வேண்டும்
என்பதற்காக இக் கவிதைகளை நான்  எழுதவில்லை! 
எனது சமுதாயத்தில் வாழும்  உறவுகள் மத்தியில்
ஒரு சிறு துடிப்பையாவது  இவை ஏற்படுத்துமாக இருந்தால்
அதுவே என் எழுத்தின் வெற்றியாக நான் கருதுவேன்!