ஆய்வுரை! கவிஞர் ஸ்ரீஸ்கந்தராஜா

“பொன்மகளின் கவிதைகள்!”

ஓர் ஆய்வுரை!





தென்றல் மெதுவாக வீச!
தென்னஞ்சோலை இதமாக
தென்பாங்கு பாட!
பொங்கியெழும் கடலலைகள்
பூமி தொட்டு வணங்கி மீள!
புத்தொளிர் வீசிக் கதிரவன்
புலர் காலை எழுந்துவர!

முற்றத்து மல்லிகையின் வாசனையோடு
எங்கும் விரவி வந்து
இதமாக ஒரு மோகன இராகம் மீட்டும்
இந்த கவிதாயினி பொன்மகளுக்கு
முதலில் இங்கே முல்லைப்பூக்கள்
தூவுகிறேன்!

கவிஞனிலும் பார்க்க
வாசகன் மிகவும் புத்திசாலி!
ஒரு கவிதையின் தலைப்பையும்
அதன் முதலடியையும் பார்த்துவிட்டு
அப்படியே புரட்டிவிட்டு போய்விடுவான்!

இத்தகைய வாசகனின்
சட்டை பிடித்து இழுத்து வைத்து
தன் கவிதைகளை வாசிக்க வைக்கவேண்டியது
ஒரு கவிஞனின் தலையாய பொறுப்பு!
அது மட்டுமல்ல...
அவனது திறமையும் அதுதான்!

ஒரு சிறந்த கவிதைக்கு
இலக்கணங்கள் தேவையில்லை!
எதுகை மோனை தானும்
இருக்கவேண்டிய அவசியமும் இல்லை!
இவைதான் பாடுபொருள்கள்
என்ற கட்டுப்பாடும் ஏதுமில்லை!

ஆனால்... அங்கு கவிதை
இருக்கவேண்டும்!
ஒரு கவிதைக்குரிய
உணர்வு நிலை இருக்கவேண்டும்!

இத்தகைய மிக எளிமையான
அளவு கோல்களோடு
முற்றத்து மல்லிகையை
கொஞ்சம் முகர்ந்து பார்ப்போம்!

முதலில் தன் கவிதைகள் பற்றி
இங்கு அறிமுகம் செய்து வைக்கின்றார்
மிக அற்புதமாக..

“என் உள்ளத்துள் உறங்கிக் கிடந்த
மெளன சப்தங்களின் மொழிபெயர்ப்புக்கள்!
தமிழோடு நான் செய்த சமாதான
உடன் படிக்கையின் சாட்சியங்கள்!

பிரசவத் தாயைப் போல்
விருப்பத்தோடு வேதனையை அனுபவித்து
ஆசையோடு நான் பெற்றெடுத்த
இலக்கியக் குழந்தைகள்!”
..........
“காட்டு மூங்கில்கள் கலைச் சிற்பியால்
கானப் புல்லாங்குழ லாவதைப் போல்
என் சிந்தனைகளை கவிச்சுவை கலந்து
நான் உருவாக்கிய சிற்பங்கள்!”

சீதனங்கள் பலகொடுத்தும்
ஒரு சீரில்லாத வாழ்வில் இணையும்
ஒரு மங்கை நல்லாளைப் பற்றி
எண்ணி எண்ணிப் பார்த்து கண்ணீர் சிந்துகிறார்!

“சீதனங்கள் சீர்வரிசை
ஆதனங்கள் ஆங்களித்து
சீரில்லாத் திருமணத்தில் இணையும்
மாது நல்லாள் தனையும்
எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்
எதுவுமே புரியவில்லை!”

இவர் ஒரு பெண்பால் கவிஞர்
என்பதனால் போலும்
தாய்மையின் மீது தாளாத பாசம்
கொள்ளுகிறார்.
தான் பிறந்தநாள் இல்லை...
அது அன்னையை போற்றும் நாள்
என்று ஒரு புது இலக்கணம் வரைவு
செய்கிறார். பாராட்டுக்கள்!

“நான் பிறந்த நாள் என் பிறந்த நாள்!
இல்லை... இல்லை...!
என்னைக் கருவில் தாங்கிய
கருணை உள்ளம் கொண்ட
அன்னையைப் போற்றும் நாள்!”

ஒரு விதைவையின் கோலத்தை!
அவள் படும் துன்பத்தை
தத்துவரூபமாக கூறவந்த கவிதாயினி...
கொட்டும் மழையில் நனையும்
கூரையில்லா மண் சுவரானாள்”
அற்புதமான அணி நலன்
கவிதைக்கு மேலும் அழகூட்டுகிறது!

“தாலிக்கயிறு மயானத்தில் உறங்க
விருப்பங்கள் விலங்குகளாக
வீடே இவள் சிறையாக
கொட்டும் மழையில் நனையும்
கூரையில்லா மண் சுவரானாள்!”

நட்பின் மகத்துவத்தை
ஒரு நறுமலரின் மணத்தோடு
உவமை கண்டு
அதன் உயர்வு கூறுகிறார் மிக அழகாக.

“தீய மலர் ஒன்றிலிருந்து வீசும் துர் நாற்றம்
நல்ல மலர்களின் நறுமணத்தையே
நாசம் செய்து விடுவதைப் போலே
தீயவர் உறவும் தூயவர் உள்ளத்தைத்
துருப்பிடிக்க வைத்து விடும்!”

ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற
வாழ்வின் உன்னதத்தை தொலைக்கும்
மாந்தரைக் கண்டு
இந்த கவிதாயினியின் கண்கள் சிவக்கின்றன!

“ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற
உன்னதத்தைத் தொலைத்து விட்டு
நெறி கெட்ட வாழ்வு வாழும்
முறை கெட்ட மாந்தரிவர்!”

காதல் கவிதைகள் எழுதாமல்
ஒருவன் கவிஞாகிவிட முடியாது!
என்பதற்கு இவரும் விதிவிலக்கல்ல...
காதல் இரசம் கொஞ்சம் அதிகமாக சுவைக்கும்
கவிதைகளை இத்தொகுப்பில் காணமுடிகிறது!

“உன்னை யாரென்று அறிந்த நாள் முதலாய்
அனைத்திற்கும் நீயே
வேரென்று புரிந்திருந்தேன்!
விழிக் கதவுகளிற்கு தாளிடாமல் அவற்றை
திறந்து வைத்தே உனைப் பார்த்திருந்தேன்!”

காதலுக்கு எத்தனையோ
கவிஞர்கள் இலக்கணம் வகுத்திருக்கின்றார்கள்!
அனால் இவர் வரையும் இலக்கணமோ
மிக அற்புதமானது! வாழ்த்துக்கள்!!

“ஒரு நொடிப் பொழுதில் இதயம் ஒருமித்துப் போதல்!
காத்திருந்து காத்திருந்து ஏக்கத்துடன் வாழ்தல்!
கற்பனைக் கடலில் காலமெல்லாம் மூழ்குதல்!
உயிருக்காய் உயிரையும் கொடுக்கத் துடித்தல்!
எவரையும் பயமின்றி எதிர்க்கத் துணிதல்!
ஆயுள் உள்ளவரை அன்பை பூஜித்தால்!
எம்மை எமக்கே அடையாளம் காட்டுதல்!
இவற்றிற்கெல்லாம் இன்னொரு பெயர் காதல்!”

காதலை மட்டுமல்ல
அது தரும் வலிகளையும்
மிக நுட்பமாக சித்தரிக்கும்
வித்தையையும் இந்த கவிதாயினி
நன்கு அறிந்திருக்கின்றார்!

“வற்றாத கற்பனை நதிகள்
என்னைச் சுற்றிக் கொண்டிருக்க
இரவிற்குள் இமைகள் இறங்க
உன்னைப் பற்றிய கனவுகள்
நீண்டு சென்றன...!”
..........

“மேனி நொந்துபோய் நின்றேன்!
மேகங்களைத் தூது விட்டேன்!
மெய்யான நம் காதல்
பொய்யானதை நான் அறியாமல்!”

.......
நீ என்னை நினைக்க
நான் உன்னை நினைக்க
பெற்றோர் ஏதோ நினைக்க
இறுதியில் எதுவுமே நிறைவேறவில்லை
இறைவன் நினைத்ததைத் தவிர...!”

ஒரு முதிர் கன்னியின் வாயிலாக
வறுமையின் கொடுமை பற்றி
மெளனமாக அழுகின்றார்!

“வறுமை என்னை
வெறுமை ஆக்கியதால்
இனிப்பிருந்தும்
எறும்பு தொடாக் கரும்பானேன்!”

இவர் புலத்தில் கால் பதித்தாலும்
தாய் நிலத்தை மறவாத தார்மீகத்தை
இவரது கவிதைகளில் காண முடிகிறது!

சமூகம், சாதிக்கொடுமை, ஏற்றத்தாழ்வு,
காதல், கண்ணீர், பிரிவுத்துயரம்,
சீதனம், விதவை, முதிர்கன்னி, தாய்மை
இவ்வாறாக எல்லா பாடுபொருள்களையும்
தன் கையிலெடுத்து
மிகவும் அழகான மொழி வளத்தோடும்
தனக்கேயுரித்தான கவிநயத்தோடும்

அற்புதமான கவிதை வரிகளாலும்
புனையப் பட்டிருக்கும் இந்த கவிதை நூல்
திசையெங்கும் பரவி
நறுமணம் வீசவேண்டுமென வாழ்த்துகிறேன்!

சமகாலக் கவிஞர்களுக்கு மட்டுமல்ல
எதிர்கால கவிஞர்களுக்கும்
இது ஒரு கைநூலாகத் திகழும் என்பதில்
சந்தேகமில்லை.!

இந்த நூல் சிறப்புற அச்சேற்றம் பெற்று
வெளிவரும்போது தமிழ் கூறும் நல்லுலகம்
இவரை மிக இலகுவாக இனம் கண்டுகொள்ளும்
என்றால் அது மிகையாகாது!

இவர் இன்னும் நல்ல பல காத்திரமான
படைப்புக்களைத் தருவார் என நம்புவோமாக!

வாழ்க தமிழ்!
வாழ்த்தட்டும் தமிழ் உலகம்!!

ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
தகவல் தொழில்நுட்ப வல்லுநர்
ரியாத், சவூதி அரேபியா
16/07/2011
srisuga2278@yahoo.com