சிறுகதை. 1

விடியலைத் தேடும் விழிகள்! 

                                                                 அன்று ஒரு சனிக்கிழமை. வழமை போல் தனியார் கல்வி நிலையத்தில் தன் ஆசிரிய கடமையை முடித்த ஜானகி,   கச்சாய் கடற்கரையோரம் நோக்கி தனது துவிச்சக்கர வண்டியை ஓட்டினாள்.  மனதில் எண்ணற்ற சுமைகளுடன் வேதனையின் விளிம்பில் இருந்து துடித்துக் கொண்டிருக்கும்  அவளுக்கு கடற்கரையோரமே சற்று மனதிற்கு அமைதியைத்   தருமிடமாக இருந்தது அன்று! கடற்கரையை அடைந்ததும் துவிச்சக்கர வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு கடற்கரையில் கிடந்த பெரிய கல்லொன்றின் மீது உட்கார்ந்த வண்ணம் பொங்கி வரும் கடலலைகளை சில நிமிடங்கள்  வெறுமையாக பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தக் கடலலைகள் குமுறுவதைப் போன்றே கடந்த காலத்தில் நடந்த  துன்பமான சம்பவங்களின் தாக்கங்களால்  அவள் மனமும் குமுறிக் கொண்டிருந்தது. அந் நினைவுகள் அவள் மனதில் ஒளிப்படக் காட்சியாய் ஓடத் தொடங்க, இவ்வுலகையே மறந்து சில மணி நேரங்கள் உட்கார்ந்திருந்தாள்.

                                                             சாவகச்சேரி கொடிகாமத்தில் வசித்து வந்த இரட்ணம் விதானையாரும் கோகிலா அம்மாவும் பத்தாண்டுகள் தவமிருந்து பெற்ற ஒரேயொரு செல்ல மகள்தான் ஜானகி. பெற்றோர் இவளுக்கு சூட்டிய செல்லப் பெயர் ஜானு. மாம்பழ நிறத்தையுடைய அவள் வதனத்திற்கு அவள் கன்னத்தில் இருக்கும் கறுப்பு மச்சம் தனி அழகைக் கொடுக்கும். ஒரு தடவை அவளைப் பார்ப்பவர்களுக்கு மீண்டுமொருமுறை  பார்க்கத் தோன்றும். அழகு, தன்னடக்கம், திறமை இவை யாவும் இவளிடம் ஒருமித்தே காணப்பட்டது.
”இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” என்ற முது மொழிக்கிணங்க   இளம் வயதிலிருந்தே பெற்றோரின் ஊக்குவிப்பினாலும் ஆதரவினாலும் பாடசாலை வகுப்பிலே அனைத்துப் பாடங்களிற்கும் அதியுயர் புள்ளிகளைப் பெற்று வருவாள். சாவகச்சேரி இந்துக் கல்லுாரியே கல்வி என்ற பெரு விருட்சம் இவளில் துளிர் விட வித்திட்ட கலைக் கோயிலாகும். பரிசளிப்பு விழாவிலே அதிக பரிசில்களைப் பெறும் மாணவிகளுள் இவளும் ஒருத்தியாக இருந்தாள்.

                                                           இவ்வாறே காலச் சக்கரமும் சுழன்றோடியது. ஜானுவும் வளர்ந்து பெரியவளாகி விட்டாள். சிறு துளிராய்  இருந்த கல்வி நாளடைவில் அவளில் பெரு விருட்சமாய் வளர்ந்து நின்றது. இரவு பகல் கண் விழித்து சிரமப்பட்டு கடும் முயற்சி செய்து கற்றதன் பயன், கல்வி பொது சாதாரண தரப் பரீட்சையிலே சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பெற்றோருக்கு மட்டுமல்ல சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கும் பெருமையைத் தேடிக் கொடுத்தாள். உயர்தரப் படிப்பிற்காய் கலைத் துறையைத் தேர்ந்தெடுத்து அத் துறையில் ஆழக் கால் பதித்தாள். உயர்தர வகுப்பில் கல்வி கற்றுக் கொண்டிருக்கையிலே இவளுக்கு கிடைத்த இனிய இரு நட்புகள்தான் நிலாணியும் மேனகாவும். இவர்கள் ஒவ்வொருவரும் ஒருவர் மீது ஒருவர் உண்மை அன்புடன் பழகினார்கள். ஒருவருக்காக ஒருவர் உயிரையே கொடுக்க தயங்க மாட்டார்கள் என்றே கூறலாம். ஏன் இவர்களது நட்பை பார்த்து இவர்களது சக தோழிகளே பொறாமைப் படுவது மட்டுமல்ல அவர்களால் இவர்கள் மூவருக்கும் சூட்டப்பட்ட பட்டம் ’த்ரீ ஸ்டார்’. தமது துக்கங்கள் சந்தோசங்களை ஒளிவு மறைவின்றி   பகிர்ந்து கொள்வார்கள். பெண்களுடன் மட்டுமல்ல ஆண்களுடனும்   தோழமையுடன் பழகுபவர்கள்தான் இவர்கள்.
இவ்வாறு நண்பர்களுடன் பழகிவரும் வேளையிலே ஜானுவின் அழகாலும் அமைதியான சுபாவத்தாலும் அவள்பால் ஈர்க்கப்பட்டவன்தான் பாலா என்ற இளைஞன். சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் வசிக்கும் செல்லையா மாஸ்டருக்கும் கமலாம்பிகைக்கும் பிறந்த மூன்று பிள்ளைகளில் மூத்தவன் பாலா. இவனுக்கு ஒரு சகோதரியும் ஒரு சகோதரனும் இருந்தார்கள். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில்தான் இவனும் கல்வி கற்று வந்தான். ஜானுவை விட மூன்று அகவைகள் அதிகமானவன். கெட்டிக் காரன் மட்டுமல்லாது பாடசாலை மாணவ முதல்வனாகவும் இருந்து வந்தான்.

                                                             பாடசாலையில் நடைபெறும் இல்ல விளையாட்டுப் போட்டிகளிலும் சரி கலை விழாக்களிலும் சரி ஜானகியும் அவள் தோழிகளும் உற்சாகமாக சக மாணவர்களுடன் கூடவே நின்று எண்ணற்ற காரியங்களுக்கு கை கொடுப்பவா்கள் என்பதனால் பாடசாலை மாணவா்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இவா்கள் மீது அலாதி பிரியம். அதுமட்டுமல்லமல் அவ்வப்போது ஆசிரியர்களின் பாராட்டுக்களையும் பெற்றுக் கொள்வார்கள். இவ்வாறு இருக்கும் போதுதான் இவர்களுக்கு பாலாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அதிகம் கிடைத்தது. உள்ளத்தை உள்ளம் அறிந்து உண்மை அன்பு செலுத்திப் பழகிய அவனது நட்பு நாளடைவில் ஜானகி மீது துாய காதலாக மாறியது. எவ்வாறேனும் தான் ஜானகியை அடைந்து விட வேண்டும் என்ற அவாவால் பாலா துடியாய் துடித்தான்.  சில காலமாக தன் காதலை ஜானகியிடம் தெரிவிப்பதற்கு   அஞ்சி வந்தான். அவளருகில் செல்லும் போதெல்லாம் தன் காதலை தெரிவிக்க பல தடவைகள் முயல்வான்...ஆனால் ஏதோ ஒன்று அவனைத் தடுத்து விடும்.

                                                                        இவ்வாறு பலமுறை முயன்று தோற்ற பாலாவிற்கு அன்று ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. வகுப்பறைக்குள் தனியாக அமர்ந்து பாடப்புத்தகம் படித்துக் கொண்டிருந்த ஜானகிக்கு அருகில் வந்து தயக்கமுடன் ”ஹலோ ஜானகி! குட்மோர்னிங்” என்றான். ”ஓ பாலாவா குட்மோர்கிங் பாலா. என்ன இந்தப் பக்கம்....” என்று இழுத்தாள். ”சும்மா..”  என்று பதிலுக்கு அவனும் இழுத்தான். சிறிது நேரம் அங்கே மௌனம் நிலவியது.அந்த மௌனத்தைக் கலைத்த பாலா, ”ஜானகி நான் உங்களிட்ட ஒரு விசயம் கேக்கலாமா? ” என்றான். தயக்கமின்றி நகைச்சுவையாக  ”ஓம் கேக்கலாமே” என்றாள் ஜானகி .” உங்கள எனக்கு நல்லா பிடிச்சிருக்கு” என்றான் அவன். ”ஓ அப்படியா உங்களயும் எனக்கு நல்லா பிடிக்குமே” என்றாள் அவள் கேலியாக... ”பிளீஸ் பி சீரியஸ் ஜானகி” என்று கூறியவன், திடீரென ”ஐ லவ் யு ஜானகி” என்றான். உள்ளத்தில் கள்ளம் கபடமின்றி அவனுடன் பழகிய ஜானகிக்கு அவன் கூறிய அந்த வசனம் பேரதிர்ச்சியைக் கொடுத்தது. இவன் என்ன கேட்கிறான் என்ற ஒரு குழப்பத்துடன் அவனை நோக்கினாள். அவள் கைகளும் கால்களும் மெதுவாக நடுங்க ஆரம்பிக்க வார்த்தைகள் வெளிவர மறுத்தன. மௌனித்தாள். சில நிமிடங்கள் மௌனமாக இருந்த பாலா ”  ஜானகி ஆறுதலாக யோசிச்சு உங்கட முடிவச் சொல்லுங்கோ” என்று கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து விலகினான். அன்றைய பாடங்களில் அவளால் வழமைபோல கவனம் செலுத்த முடியாதிருந்தது. பாலா கூறியதைப் பற்றி மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்த்தாள்.

                                                                         அடிக்கு மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதுபோல் ஆரம்பத்தில் பாலாவின் காதலை ஏற்க அவள் மறுத்தாலும் அவனது விடாப்பிடியான பேச்சினாலும் அழுத்தத்தினாலும் நாளடைவில் அவளும் அவன் விரித்த காதல் வலையில் விழுந்து விட்டாள். அவா்களது உள்ளத்தில் ஊறிய கள்ளமற்ற காதலுக்காய் தங்கள் இதயவாசலைத் திறந்து விட்டார்கள். கற்பனை உலகில் அவா்களது காதல் புறா சிறகடித்துப் பறந்தது. இவர்களது உண்மைக் காதல் சிலகாலம் பெற்றோர் அறியாத ஊமைக் காதலாகவே வளர்ந்தது. இவ்வாறு வாரங்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்களாகி ஆண்டுகள் பல பறந்தோடின. இவா்களது காதலும் புனிதமான காதலாக வளா்ந்து சென்றது.

                                                                           உயர்தரப் பரீட்சையிலே திறமையான பெறுபேறுகளைப் பெற்ற பாலா யாழ் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவத் துறையில் தன் பட்டப் படிப்பை ஆரம்பித்தான். காதல் வலையில் சிக்குணடாலும் தம் கல்வியில் இருவரும் கவனம் செலுத்தத் தவறவில்லை. யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவா் விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த பாலா, வார இறுதி நாட்களில் சாவகச்சேரிக்கு வந்து ஜானகியை சந்தித்து உரையாடுவான்.  இருவரும் அந்த இரு நாட்களை ஆலுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அவா்களது வதனம் அப்பொழுது மலர்நத செந்தாமரையயை வென்று விடும்.

                                                                  இவ்வாறே காலச்சக்கரமும் சுழன்றோடியது. பாலா பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டில் கல்வி கற்றுக்கொண்டிலுந்தான். ஜானகியும்  உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக் கழகம் புகும் வாய்ப்பினைப் பெற்று முதல் ஆண்டில் கல்வி கற்றுக் கொண்டிருந்தாள். சில மாதங்களின் பின்னர் நான்காண்டுகள்  பட்டப் படிப்பை படித்து முடித்த  பாலாவிற்கு அதிஸ்டவசமாக  வங்கி ஒன்றில் வேலை கிடைத்து விடவே, அவன் அளவற்ற ஆனந்தம் கொண்டான். அவனது பெற்றோரோ அவனது திருமண வாழ்கையைப் பற்றிய பேச்சை ஆரம்பித்தார்கள். அது பற்றிய அபிப்பிராயத்தை பாலாவிடம் தெரிவிக்கவும் செய்தார்கள். தான் ஜானகி மீது கொண்டிருக்கும் காதலை பெற்றோருக்கு கூறுவதற்கு ஆரம்பத்தில் அவன் தயங்கினாலும் அந்த சமயம் வேறு வழியின்றி  கூறி விடுகிறான். பெற்றோர் சொற்கேட்டு அடக்கமாக திறமையுடன் தன் கல்வியை கற்று முடித்து இன்று ஒரு நல்ல உத்தியோகத்தில் இருக்கும் தம் பிள்ளை விரும்பும் பெண்ணை  திருமணம் செய்து கொடுக்க மறுப்புத் தெரிவிக்க விருப்பமில்லாத அவன் பெற்றோர்,  தம் மகனது விருப்பத்தை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு ஜானகியின் பெற்றோரிடம் இவா்கள் காதலை தெரியப்படுத்தினார்கள்.  ஒரு சிறு விடயத்திற்கூட தம் மகளது மனம் நோகக் கூடாது என்று நினைப்பவா்களல்லவா ஜானகியின் பெற்றோர்!    மகளுடைய விருப்பத்தை அவா்களால் எப்படித்தான் மறுக்க முடியும்?  ஜானகியுடன் இது பற்றி ஆலோசிப்பதன் முன்னதாகவே தமது விருப்பத்தை பாலாவின் பெற்றோரிடம் கூறினார்கள். சில மாதங்களின் பின்னா் ஜானகியினதும் பாலாவினதும்  திருமணத்தை மிக சிறப்பாக நடத்தி வைத்தார்கள் இருவரது பெற்றோர்களும். இல்லறமெனும் நல்லறத்தில் கால்பதித்த தம்பதியா் இருவரது  வாழ்க்கையும் சிறந்தே விளங்கியது.

                                                                             ஜானுவின் விருப்பப்படி பாலாவும் அவள் தொடர்ந்து பல்கலைக் கழக கல்வியைக் கற்று  முடிப்பதற்கு அனுமதி கொடுத்தான்.  ஆண்டுகள் ஐந்து பறந்தோடின. இல்லற வாழ்வில் அவா்கள் இன்பமாக இருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்ட  அவர்களுக்கு சங்கவி, மாதவி என்ற இரு பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.  சங்கவி மூன்று அகவையை தாண்டி விட்டாள். மாதவி மூன்றே மாதக் கைக்குழந்தை. பல்கலைக் கழகத்தில் கலைமாமணிப் பட்டத்தை பெற்ற ஜானகி சாவகச்சேரி இந்துக் கல்லுாரியில் ஆசிரியராகக் கடமையாற்றி வந்தாள்.

                                                             இவ்வாறு ஓருயிரும் ஈருடலுமாய் வாழ்ந்து வந்த  இந்த தம்பதியரின் வாழ்வில்தான் அந்த கொடூரச் சம்பவம் நடந்தது. ஆண்டாண்டு காலமாய்   இலங்கை அரசினால் அடக்கி ஒடுக்கப்பட்டு ஆதரிக்க எவரேனுமின்றி அநாதரவாக்கப்பட்ட எம் மக்கள் வரலாற்றில்   1995ம் ஆண்டு காலப்பகுதியில் இடம் பெற்றது பெரியதோர் இடப்பெயர்வு. அலைக்கழிந்த பிறவிகளாக அடிபட்டு அந்தரிச்சு  அடை மழையில் அடிக்கடி சேற்றில் அடிதவறி விழுந்து அகதிகள் ஒதுக்கீட்டில் இலட்சம் மக்களுடன் இலட்சியங்களை இழந்து போகுமிடம் தங்குமிடம் தெரியாது வீதியில் படுத்துறங்கி விதியின் கொடுமையால் விலங்கிடும் கொடுமையை ஏற்று அந்த இலட்சம் மக்களுடன் பாலாவின் குடும்பமும் வன்னிப் பெருநிலப் பரப்பை நோக்கி தம் பயணத்தை தொடங்கியது.

                                                                                          சன நெருக்கடிக்குள் நத்தை வேகத்தில் நடந்து ஏறக்குறைய கிளாலி கடற்கரையை சென்றடையும் சமயம், இயமன் வந்தது போல் வந்த ஹெலிகொப்டர் ஒன்று மக்களைச் சுற்றி வட்டமிட்டு துப்பாக்கி வேட்டுக்களை சரமாரியாகப் பொழியத் தொடங்கவே, அனைவரும் அவலப்பட்டு நாலா பக்கமும் சிதறி ஓடத் தொடங்கினார்கள். மூன்று மாதக் குழந்தையை கையில் தாங்கியபடி சென்று கொண்டிருந்த ஜானகி, அஞ்சி நடுங்கியபடி தனது குழந்தையை இறுகவே அணைத்துக்கொண்டு பாதுகாப்பை வேண்டி அங்கே நின்ற ஒரு மரத்தின் கீழே ஓடினாள். துவிச்சக்கர வண்டியில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றை மட்டுமே எடுத்துக் கொண்டு   இவா்களுக்கு சற்று முன்னராகச் சென்று கொண்டிருந்த பாலா, ” ஐயோ அம்மா” என்று கதறியபடி துவிச்சக்கர வண்டியை நழுவவிட்ட மறுகணமே துடிதுடித்து நிலத்தில் விழுந்து புரண்டான். தன் கணவனுக்கு என்ன நடந்ததென்றே புரியாமல் விழித்த ஜானகி, தன் மூன்று மாத மழலையைத் தாங்கியபடியே பாலாவை நோக்கி  ஓடினாள். பாலா இரத்த வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தான். அவன் உயிர் மயிரிழையில் ஊசலாடித் துடித்துக்கொண்டிருந்தது. தன் கணவனின் பரிதாப நிலையைக் கண்டு துடித்த ஜானகி, ”ஆராவது என் கணவரைக் காப்பாற்றுங்கோ“ என்று கை கூப்பி வணங்கியவாறு கதறினாள். அன்றிருந்த நிலையில் எல்லோரும் தாம் உயிர் பிழைத்துக் கொண்டால் போதும் என்று நினைத்தார்களோ என்னவோ, யாரும் அவளுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. பாலா   தன் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தான். அந்த சனக் கூட்டத்தில் எங்கிருந்தோ வந்த இரு இளைஞர்கள் அவசர அவசரமாக பாலாவைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அவா்களை யாரென்று சரியாக அடையாம் காண முடியவில்லை.சாரணா் படையைச் சோ்ந்தவா்களாக இருப்பார்கள் போலும். பாலா,  ஜானகி பிள்ளைகளைகள் இவா்கள் அனைவரையும் ஒரு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மருத்துவ மனையை நோக்கி மிக வேகமாக வாகனத்தைச் செலுத்தினார்கள். ஆண்டவா என்ன கொடுமை இது. இடை வழியில் செல்லும்போதே தன் உயிரை பறிகொடுத்து  விட்டான் பாலா. கடவுளே என் கணவரைக் காப்பாற்று என்று இறைவனிடம் மன்றாடிய ஜானகி, பாலா இறந்து விட்டான் என்பதை அறிந்ததுமே அனலிற்பட்ட புழுவானாள். இதை விதி என்று கூறுவதா? இல்லை எவ்வாறு கூறுவது? இரக்கமற்ற காலக் கடவுளை நொந்து கதறினாள் ஜானகி. பாலாவை மட்டுமா அந்த வானுார்தி பலியெடுத்தது.    ஜானகியின் வாழ்வுமல்லவா பலிகொள்ளப்பட்ட வாழ்வாயிற்று! சோகத்தின் காயங்கள் அவள் உள்ளத்தை நெருஞ்சியாய் வதைத்தன. வெளியே கூற முடியாமற் தவித்தாள். இன்பமான அவா்கள் வாழ்வு இடைநடுவிலல்லவா பறி போய் விட்டது!

                                                    நீரிற் குமிழிபோன்ற இந்த நிலையறற்ற வாழ்வை நிலை பெறச் செய்வதற்காகத்தானே இவா்கள் பயணம் வன்னியை நோக்கிப் புறப்பட்டது. ஆனால் இன்று என்ன  ஆயிற்று? இனியும் நான் ஏன் உயிர் பிழைக்க எண்ண வேண்டும் என்று எண்ணிய ஜானகி, மீண்டும் சாவகச்சேரியை நோக்கித் தன் பயணத்தை திருப்பினாள். பாலா இறந்த செய்தியைக் கேட்டதுமே இடியோசை கேட்ட நாகம் போலான இரட்ணம் விதானையார் மாரடைப்பால் மறுகணமே மரணித்தார். பாலாவின் குடும்பத்தினரோ மீளாத் துயரில் மூழ்கினா். ஜானகியின் வாழ்வோ கேள்விக் குறியாயிற்று....

  
                                                         தன்னை மட்டுமல்ல இவ்வுலகையே மறந்து கடந்தகால சம்பவங்களை எண்ணி அதில் மூழ்கி கடற்கரை கல்லின்மீது அமர்ந்து கொண்டிருந்த ஜானகி, திடீரென வாய்விட்டு புலம்ப ஆரம்பித்தாள். ”என்ர ஆருயிரே பாலா உயிராய் நீங்களும் மெய்யாய் நானும் உயிர்மெய்யாய் இணைஞ்சிருந்தமே. கடவுளுக்கே பொறுக்கேல்லையோ! காலனுக்கும் இமரக்கமில்லையோ? இரக்கமற்ற காலனவன் என்ர உயிரை ஏன் எடுத்தான் மெய்யை   தனியா தவிக்க விட்டு  ! ” மெய்யை என்னத்துக்கு விட்டு வைச்சான்? இந்த உலகத்தில பொயய்யான வாழ்கை வாழுறதுக்கா?    என் அன்பே!  இதயம் வெம்பி வெடிக்குதே!   என்ன பாவம் நான் செஞ்சன்? இண்டைக்கு என்ர நிலய நீங்கள் எப்படி அறிவியள்! நிலையில்லாத கடலலையாய் துாக்கம் கலைந்து துக்கத்தில்! உங்கட இழப்பால என்ர உள்ளம் களிப்பிழந்த கலக்கத்தில..ஆறவழி தேடுறன். ஆனா முடிலேல்லையே! என்ன  நடுக்கடலில் தள்ளிப் போட்டு  நீங்க மட்டும் கரையேறி விட்டியளே .  சிறகு நனைஞ்ச பறவைக்குத் தன் சிறகுகளே சுமையா இருப்பதப்போல இண்டைக்கு எனக்கு நானே சுமையாயிட்டன்.  உங்கள இழந்தோடனயே என்னையுமல்லோ துலைச்சு விட்டன். உங்கட மரணம் பொய்க்காதோ? உயிருடன் நீங்கள் வருவியளோ?”  என்றெல்லாம் தனக்குள்ளே பல கேள்விகளைக் கேட்டு புலம்பிய ஜானகி, திடீரென எழுந்து ”என்ர தெய்வமே பாலா நீங்கள் எங்கே? என் பாலா நீங்கள் எங்கே” என்று தன் சுயநினைவை இழந்து அங்குமிங்கும் பார்த்து வாய்விட்டுக் கதறினாள்  .
வழமைபோல மாலையில் தன் சகோதரியின் மகள் ஜனாவுடன் கடற்கரையோரம் நடைப்பயிற்சிக்குச் செல்லும் நிலாணி, தற்செயலாக அன்று ஜானகியைச் சந்திக்க நேர்ந்தது. அங்குமிங்கும் ஓடியோடி ஓலமிட்டு புலம்பிய ஜானகியைக் கண்டதுமே அவளை நோக்கி ஓடினாள் நிலாணி. அவள் அருகிற் சென்று அவளது கையைப் பற்றி ”ஜனாகி என்னாச்சு? ஏனடி இப்படி அழுகிறாய்? இஞ்ச தனியா என்னத்துக்கு வந்தனி” என பல கேள்விகளைக் கேட்டபடி ஜானு ஜனானு என்று பலமுறை அழைத்து அவள் கையைப் பற்றி உலுப்பிய பின்னா்தான் ஜானகி சுயநினைவிற்கு வந்தாள். அப்போதான் தான் சுமார் இரண்டு மணி நேரங்களாக தன்னை மறந்து கற்பனை வெள்ளத்தில் மூழ்கிப் போயிருந்ததை உணா்ந்தாள் ஜானகி. சுய நினைவிற்கு வந்தவள் தன் உயிர்தோழி நிலாணியைக் கண்டதுமே அவளை இறுக அணைத்துக் கதறியழுதாள். ”நிலாணி என்ர கணவரை இழந்து என்னால   வாழ முடியேல்லயடி! நானும் அவருடன் போயிருக்கலாம் ஏனடி எனக்கிந்த விலங்கிட்ட கொடுமை? வேடன் அம்புபட்ட பறவையா வேதனையைத் தாங்கிங்கிக் கொண்டு  நான் ஏன் இன்னும் உயிருடன் இருக்க வேணும்? வேண்டாமடி எனக்கிந்த கொடிய வாழ்க்கை”. என்று தன் மனவேதனைகளை வார்த்தைகளால் கொட்டியவாறு சிறு பிள்ளையைப் போல் விம்மி விம்மி அழுதாள். அவள் வேதனைப் படுவதைப் பார்த்த நிலாணி, தன் இதயமே வெடிப்பதைப்  போல உணா்ந்தாள்! ஜானகியுடன் கூடவே சேர்ந்து  தானும் அழுது விடுகிறாள்...
சில நிமிடங்களிற்குள் தன்னைச் சுதாகரித்துக் கொண்ட நிலாணி, ”ஜானு வாடி வீட்ட போவம் என்று அவளை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த தனது வீட்டிற்கு   சென்றாள். அதுவரை எதுவுமே பேசாது மௌனித்துக் கொண்டிருந்த ஜானகிக்கு கூடாக ஒரு கோப்பை தேநீரைக் கொடுத்து முற்றத்தில் நின்ற மாமர நிழலுக்கு அவளை அழைத்துச் சென்று அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அவளை அமர வைத்து தானும் கூடவே உட்கார்ந்தாள். ”ஜானு முதலில் தேத்தண்ணியக் குடியடி” என்று ஜானகியை நோக்கி உரிமையோடு கூறினாள்.  தேநீரை அருந்திக் கொண்டிருந்த தன் உயிர் தோழிக்கு தன்னால் முடிந்தவரை ஆறுதல் வார்த்தைகளைக் கூறி அவளை அமைதிபெறச் செய்தாள் நிலராணி.
”ஜானு உன்ர நிலை எனக்கு விளங்குதடி. இழப்பு என்பதை ஆராலுமே ஈடுசெய்ய முடியாது.  அதிலேயும் உன்ர நிலை பரிதாபமானது. அதுக்காக இப்படியே எத்தன நாளைக்குத்தான் அழுதுகொண்டு இருக்கப் போறா? இண்டைக்கு நீ ரெண்டு பிள்ளையளுக்கு தாய். எதுவுமே அறியாத   பிஞ்சுக் குழந்தையள். பாலாவில நீ உண்மையான காதல் வைச்சிருக்கிறாய்    எண்டால் நீ  உன்ர பிள்ளையள நல்ல ஒரு நிலைக்கு கொண்டு வர வேணும் இனி உன் வாழ்க்கை அவர்களுக்காகத்தான். அவா்களுடைய முன்னேற்றத்தைப் பற்றியும் எதிக்காலத்தைப் பற்றியுமே இனி நீ சிந்திக்க வேணும். உன்னை நீதான் மாத்திக் கொள்ளோணும்”. என்று அன்பாகவும் ஆதரவாகவும் சில புத்திமதிகளைச் கூறினாள் நிலாணி.நில நிமிடங்கள் ஆழ்ந்த சிந்தனையுடன் அமர்ந்திருந்த ஜானகி, தன் தோழி கூறுயவை யாவும் உண்மையே என்பதை உணர்ந்தாள்.
”ஓமடி நீ செல்லுறது சரிதான்.என்ர பிள்ளைச் செல்வங்களை நான் தவிக்க விட மாட்டன். இனி என் வாழ்க்கை எல்லாம் இவர்களுக்காகத்தான்”. என்று பதிலளித்தாள். நேரம் சென்றதை அறியாமல் உரையாடிக்கொண்டிருந்த ஜானகி திடீரென ”கடவுளே மணி ஒன்பதை் தாண்டி விட்டதே! அம்மா தேடப்போறாவே. என்ர பிள்ளையள் என்னக் காணேல்ல எண்டு அழப்போகுதுகளே”! என்று கூறியவள், அவசர அவசரமாக நிலாணியிடமிருந்து விடை பெற்று   துவிச்சக்கர   வண்டியை தன் இல்லம் நோக்கி வேகமாக ஓட்டினாள்.
இவங்கையில் இனப்பிரச்சினையால் ஏற்பட்ட  வன்முறையினால் இந்த ஜானகியின் வாழ்க்கையைப் போல் எத்தனை ஜானகியர் வாழ்வு நிராயுதபாணிகளாய் நிற்கதியில் நிற்கின்றன! தொடருமா இந்தத் துன்பம்? இல்லை வெளிக்காத கிழக்கிற்காகக் கூவும் சேவலைப்போல ஆகி விடுமோ இவர்கள் வாழ்வு? தினமும் அவள் புஜித்த காதலனோ இன்று கல்லறையில் துாங்குகின்றான் தன் காதலை மட்டும் வாழவிட்டு! துாக்கமின்றி பள்ளியறையில் துக்கமுடன் அவள் வாட, அவனோ இன்று துாங்கிவட்டான் அவளைத் தனியாய் கதறவிட்டு. அவள் இதயத்தில் அவன் நடந்து சென்ற நாட்களை எண்ணி அவள் ஏங்க, இடைநடுவே அவன் இறந்து விட்டான். அவளோ நித்தமும் ஏங்கி அழுகின்றாள்! அன்று கற்பனை உலகில் சிறகடித்துப் பறந்த அவள் காதல் புறா, இன்று அவள் இதய அறைக்குள்ளே சென்று தன்னைத் தானே அடைத்துக் கொண்டது. விடியாத இரவுகளில் முடியாத துன்ப சுமைகளைத் தாங்கியதாய் இன்று இவள் வாழ்வு.... கண்கள் கண்ட காட்சிகளும் பொய்யாயின. இன்ப வாழ்வைத் தேடிய அவள் விழிகளில் நீர் மட்டும் மெய்யானது.
வானக்குடையின் கீழ் சந்தோசப் புப்பறித்து பாடித்திரிந்த இந்த ஜானகியின் வாழ்க்கைச் சுவரில் பேரிடி விழுந்ததனால் அவள் அழகு முகம் இன்று அழுகை முகமாயிற்று! அன்று அவள் விழிகள் பேசியபோது மௌனித்த இவள் மொழிகள், இன்று அவனை இழந்ததனால் ஊமைகளாயிற்று! விடிவெள்ளியான அவனைப் பறிகொடுத்ததனால் விடிவு தெரியாமல் தவிக்கின்றாள். அழுது புரண்டு ஓலமிட்டாலும் தன் இதய வாசலுக்கு இனி வரமாட்டாத தன் கணவனை எண்ணி நாளும் துடிக்கின்றாள். கணவன் இறந்து விட்டான். ஆனால் அவன்மீது அவள் கொண்ட காதலோ இன்றும் உயிருடன் வாழ்கிறது.. ஆயினும் தன் வாழ்க்கையில் என்றோ ஒருநாள் வசந்தக் காற்று வீசும் என்ற நம்பிக்கையில் விடியலை எதிர்பார்த்துக் காத்துள்ளன அவள் விழிகள்.....

முற்றும்.

ஆக்கம். பொன்மகள்.